தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ‘டி.எம்.செளந்தரராஜன் சாலை’ - தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - Chennai news

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவர் வசித்து வந்த தெருவுக்கு ‘டி.எம்.செளந்தரராஜன் சாலை’ என பெயரிடப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் ‘டி.எம்.செளந்தரராஜன் சாலை’ - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னையில் ‘டி.எம்.செளந்தரராஜன் சாலை’ - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

By

Published : Mar 22, 2023, 5:10 PM IST

சென்னை:சென்னையில் உள்ள மந்தைவெளியில் மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் வசித்து வந்த தெருவிற்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது. இதனை முன்னிட்டு வருகிற 24ஆம் தேதி, அவரது நூற்றாண்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதற்கான புதிய பெயர் பலகையைத் திறந்து வைக்க உள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''1950ஆம் ஆண்டில் ‘கிருஷ்ண விஜயம்’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடத் தொடங்கியவர், டி.எம்.சௌந்தரராஜன். கடந்த 1954ஆம் ஆண்டில் வெளி வந்த ‘தூக்குத் தூக்கி’ என்ற திரைப்படம் அவரைப் புகழின் உச்சிக்குத் தூக்கிச் சென்றது. 1950களில் தொடங்கிய அவரது இசை சாம்ராஜ்யம், 1980ஆம் ஆண்டு வரையில் நீடித்தது. அவர் அதிகம் பாடியது, மறைந்த திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனுக்கு.

2வதாக, எம்.ஜி.ஆர் மற்றும் 3வதாக ஜெய்சங்கர் உள்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் என ஏறக்குறைய 40 ஆண்டு காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 11 மொழித் திரைப்படங்களில் அவர் பாடி உள்ளார். மொத்தம் கிட்டத்தட்ட 851 திரைப்படங்களில் டி.எம்.எஸ். என்னும் கலைஞர் 2 ஆயிரத்து 53 பாடல்களை பாடி உள்ளார். இவ்வாறு திரைப்படப் பாடல்களை பாடுவது மட்டுமின்றி, அவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.

குறிப்பாக 1962ஆம் ஆண்டு வெளியான ‘பட்டினத்தார்’ என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அருணகிரிநாதர், அகத்தியர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் டி.எம்.எஸ் நடித்துள்ளார். பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். 2002ஆம் ஆண்டில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.

இவர் இறுதியாக பாடிய பாடல் என்றால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக 2010ஆம் ஆண்டு கோவையில் நடந்த மாநாட்டிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் அவர் பாடிய இறுதிப் பாடல். கடந்த 1923ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி பிறந்த அவர், கடந்த 2015ஆம் ஆண்டு மறைந்தார். அவரது வீடு சென்னை மந்தைவெளியில் உள்ள மேற்கு வட்ட சாலையில் உள்ளது.

மேலும் அவரது நூற்றாண்டு விழா வருகிற 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இதனை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கும் வகையில், அவர் வசித்த சென்னை மந்தைவெளியில் உள்ள மேற்கு வட்ட சாலைக்கு ‘டி.எம்.செளந்தரராஜன் சாலை’ எனப் பெயர் வைக்கப்படுகிறது. இதனை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு பெயர் பலகையைத் திறந்து வைக்கிறார். அன்று அவரை நினைவு கூரும் வகையில் இசைக் கச்சேரி நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"சின்னக் கலைவாணர் விவேக் சாலை" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details