தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஜுலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - அரசாணை வெளியீடு - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

tamilnadu
tamilnadu

By

Published : Jun 30, 2020, 11:00 PM IST

ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பல்வேறு தருணங்களில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களின் அடிப்படையில், ஏற்கனவே நடைமுறையிலுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள ஊரடங்கு உத்தரவு, வருகின்ற ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

  • சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள முழு ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை தொடரும்
  • ஜூலை 5ஆம் தேதி முதல் 4 ஞாயிற்றுக் கிழமைகளில் (ஜூலை 5, 12, 19, 26) எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்
  • மதுரை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் ஜூலை 5ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது
  • அனைத்து மாவட்டங்களுக்குள் பொதுப் போக்குவரத்து ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்துப்படும்
  • கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் பத்தாயிரத்திற்கு குறைவான கோயில், மசூதி, தேவாலயத்தில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்
  • மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள முறைப்படி தரிசனம் அனுமதிக்கப்படாது
  • நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவித தளர்வுமின்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்
  • முழு ஊரடங்கு அமலிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்
  • சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜூலை 6ஆம் தேதி முதல் அதிகபட்சமாக 80 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது
  • ஜூலை 6ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம்
  • ஜூலை 6ஆம் தேதி முதல் உணவகங்களில் குளிர்சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது
  • நீலகிரி மாவட்டத்திற்கும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது

இ- பாஸ் முறை

ஒரு மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதியளிக்கப்படும்

வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வரவும் இ-பாஸ் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்

முழு ஊரடங்கு நேரங்களில் அனுமதிக்கப்பட்ட இ-பாஸ் ஜூலை 5ஆம் தேதி வரை செல்லும். இதற்குப் புதிய இ-பாஸ் பெறவேண்டிய அவசியமில்லை

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்குத் தடை தொடரும். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன் அதனை ஊக்கப்படுத்தலாம்

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்

திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகள்:

• திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது
• இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது

தளர்வுகள்

  • தேநீர்க் கடைகள், உணவு விடுதிகள், காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகின்றன
  • தேநீர்க் கடைகளிலுள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது
  • வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு இயக்கலாம்
  • ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது
  • முடிதிருத்தும், அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளோடு இயங்க அனுமதிக்கப்படுகிறது
  • மீன் கடைகள், கோழி இறைச்சிச் கடைகள், மற்ற இறைச்சிச் கடைகள், முட்டை விற்பனைக் கடைகள் ஆகியவை தகுந்த இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன

பொதுக் கட்டுப்பாடு:

1. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144இன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்

2. தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment Zones) தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாகக் கடைபிடிக்கப்படும்

3. அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள், பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திடீர் விடுப்பில் சென்ற மருத்துவர்; ஜெயராஜ்- பென்னிக்ஸ் வழக்கில் எழும் சந்தேகங்கள்!

ABOUT THE AUTHOR

...view details