சென்னை:எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது வாடிக்கையாகி வருகிறது. அவர்கள் மீனவர்களைக் கைது செய்து, அவர்களது படகுகளையும், வலைகளையும் பறிமுதல் செய்து எடுத்துச்செல்கின்றனர்.
இதில் மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டால், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த மீனவர்களை தாயகத்துக்கு மீட்டு வந்துள்ளனர். மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களது படகுகள் இலங்கையிலேயே முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் படகுகளை மீட்பது தொடர்பாக இலங்கை நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகள் இலங்கை நீதிமன்றத்தில் நாளை(ஜன.27) விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் படகுகள் மீட்பு தொடர்பாக வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக தமிழ்நாட்டு மீனவர்கள், பத்து பேர் இன்று இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க பொறுப்பாளர் ஜேசுராஜா தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் எட்டு பேரும், புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் இரண்டு பேரும், சென்னை விமான நிலையத்திலிருந்து அலையன்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு புறப்பட்டுச் சென்றனர். இலங்கையில் உள்ள தங்களது 17 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க உள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம்