சென்னை:கடந்த 2011-21 வரையிலான அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்கள், அவற்றின் நிலை, அதற்கான நிதி ஆகியவை குறித்த முழுமையான அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 23) வெளியிட்டார்.
110 விதியை மீறிய அதிமுக:இதைத் தொடர்ந்து நிதியமைச்சர் பேசும்போது, 'கடந்த அதிமுக ஆட்சியில், 110 விதியின் கீழ் 3 லட்சத்து 27 ஆயிரம் கோடி மதிப்பிலான 1704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும், இதில் ரூ.87,405 கோடி மதிப்பிலான 1167 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இது 110 விதியின்கீழ் மொத்த நிதியில் 25 விழுக்காட்டிற்கும் கீழாகும். மேலும், 537 திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் கைவிடப்பட்டும், அரசாணை வெளியிடப்படாமலும் எனப் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் ரூ.76,619 கோடி மதிப்புள்ள 143 திட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி மதிப்புள்ள 398 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை எனவும் தெரிவித்தார். 2013-14ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 292 அறிவிப்பில் 56 ஆயிரத்து 346 கோடி மதிப்புள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாகவும், இது அந்த நிதியாண்டில் விருப்ப செலவினத்தைவிட 135 விழுக்காடு அதிகம் என்றும், இப்படி அறிவித்தால் எப்படி திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.