கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
மேலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாது எனவும், தேர்வுகளின்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவர் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஆக. 10) பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என புகார் எழுந்தது.
இதையடுத்து, அரசு தேர்வுத்துறை இது தொடர்பாக தற்போது விளக்கமளித்துள்ளது. அதில், “காலாண்டு, அரையாண்டு ஆகிய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை கணக்கில் கொண்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மொத்தம் ஒன்பது லட்சத்து 45 ஆயிரத்து 77 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த பின்னர் 231 மாணவர்கள் இயற்கை எய்தி உள்ளனர். 658 மாணவர்கள் பள்ளிகளிலிருந்து மாற்றுச் சான்றிதழ்கள் பெற்று இடையிலேயே சென்றுள்ளனர்.
நான்காயிரத்து 359 மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளுக்கு வராமலும், பள்ளிகளுக்கு முழுமையாக வருகை புரியாமலும் இருந்துள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாயிரத்து 248.
இவர்களைத் தவிர மீதமுள்ள 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.