தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! - பொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

2023-24ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை வெளியிட உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜூலை 2ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்கவுள்ளது.

tnea
பாெறியியல்

By

Published : Jun 25, 2023, 2:54 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப்படிப்புகளான பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கு, கடந்த மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரையில், 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். அதில் ஜூன் 4ஆம் தேதி வரையில், 1 லட்சத்து 55 ஆயிரத்து 124 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து இருக்கின்றனர்.

மேலும், மாணவர்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நேரடியாக கடந்த 14ஆம் தேதி வரையில் நடைபெற்றது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவர்களுக்கும் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் தயாரிப்பு தொடர்பாக உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், "2023-2024ஆம் ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது 10ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. 2021-2022ஆம் கல்வியாண்டில் கரோனா பெருந்தொற்றின் காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தரவரிசை மதிப்பெண்கள், இயற்பியலில் பெற்ற மதிப்பெண்கள், கணித பாட மதிப்பெண்கள், விருப்பப் பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள், பிறந்த தேதி உள்ளிட்டவை ஒன்றாக இருக்கின்றபோது இறுதியாக ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். கணக்கு, இயற்பியல், வேதியியல் ஆகியப் பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்ட கட் ஆஃப், இரு மாணவர்களுக்குச் சமமாக இருந்தால், முதலில் கணித மதிப்பெண்ணும், இரண்டாவதாக இயற்பியல் மதிப்பெண்ணும், மூன்றாவதாக விருப்பப் பாடத்தின் மதிப்பெண்களும் கணக்கீடு செய்யப்படும். இந்த மூன்று பாடங்களின் மதிப்பெண்ணும் சமமாக இருந்தால், அடுத்ததாக 12ஆம் வகுப்பின் மொத்த மதிப்பெண்களும் கணக்கிடப்படும்.

அதுவும் சமமாக இருந்தால், பிறந்த தேதியில் மூத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்கண்ட அனைத்தும் சமமாக இருந்தால் மட்டுமே ரேண்டம் எண் கணக்கீடு செய்யப்படும். அதன்படி, ரேண்டம் எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2023-24ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை(ஜூன் 26) மதியம் 12 மணிக்கு வெளியிட உள்ளார். மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தரவரிசை தொடர்பாக புகார்களைத் தெரிவிக்க ஜூன் 30ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏற்கனவே அறிவித்தபடி, வரும் ஜூலை 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை விதிகளில் மாற்றம் - உயர் கல்வித்துறை முடிவு

ABOUT THE AUTHOR

...view details