சென்னை: 2024நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரிசத்ய பிரதா சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக் 27) வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும். அதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதன் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தமிழகத்தில் இன்று தொடங்குகிறது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், 17 வயது நிறைவேறியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவர்களுக்கு 18 வயது முடிந்ததும் தானாக பெயர் சேர்க்கப்பட்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு ஏதுவாக, ஆண்டுதோறும் ஜனவரியில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
இந்நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க உள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி இன்று வெளியிட்டார். இந்த மாவட்ட அளவிலான பட்டியலை, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுகின்றனர்.