சென்னை: உலகம் முழுவதும் குழந்தைகள் ஏதோ ஒரு காரணத்திற்காக காணமல் போகின்றனர். அது கடத்தலாக இருக்கலாம், பெற்றோருக்கு பயந்து உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை என்றாலே, அவர்கள் காணாமல் போன குழந்தைகளின் பட்டியலில்தான் சேர்க்கப்படுவார்கள்.
தேசிய அளவில் ஒரு நாளுக்கு சுமார் 200 வரையிலான குழந்தைகள் காணாமல் போவதாக வழக்குகள் பதியப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் காணாமல் போகும் 3இல் ஒரு குழந்தை பற்றி தகவலே கிடைக்காமல் போகின்றது. ஆகையால், தற்போது காணாமல் போன குழந்தைகளை கண்டறிவதற்காக 'ஆப்ரேஷன் மிஸ்ஸிங் சில்ட்ரன்' என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட அனைத்து காவல் ஆணையர் மற்றும் எஸ்பிக்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், "கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன கண்டுபிடிக்கப்படாத வழக்குகளின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.
அதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களின் உதவியுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஆகியோர் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அனைத்து காவல் ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர்கள் இந்த சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நல குழுக்களும் இந்த சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மாபெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும்.