இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (அக்டோபர் 27) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், ”தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 69 ஆயிரத்து 344 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் புதிதாக 2,522 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 93 லட்சத்து 97 ஆயிரத்து 691 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 7 லட்சத்து 14 ஆயிரத்து 735 நபர்கள் கரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் மருத்துவமனை தனிமைப்படுத்தும் மையங்களில் 27 ஆயிரத்து 734 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 4,029 நபர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 75 ஆயிரத்து 518ஆக உயர்ந்துள்ளது.
நோயாளிகளில் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 11 பேரும் அரசு மருத்துமனையில் 16 பேரும் என 27 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 983ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் சென்னையில் 695 பேர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 209 பேர், சேலம் மாவட்டத்தில் 146 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 144 பேர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் 115 பேர் முறையே கரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் ஐந்து பேர், ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேர், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு தனியார் ஆய்வகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது.