தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 17) புதிதாக 4 ஆயிரத்து 538 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, "தமிழ்நாட்டில் 17 லட்சத்து 56 ஆயிரத்து 998 நபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 907 நபர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று (ஜூலை 17) 47 ஆயிரத்து 539 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 4 ஆயிரத்து 538 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்த 4,463 நபர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 75 நபர்களுக்கும் நோய் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்கள் ஆகியவற்றில் 47 ஆயிரத்து 782 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 3,391 நபர்கள் இன்று(ஜூலை 17) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 807 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், சிகிச்சைப் பலனின்றி 79 பேர் இன்று இறந்துள்ளனர். இதுவரை 2,315 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர்.
தலைநகர் சென்னையில் இரண்டு நாள்களாக குறைந்து வந்த நோய்த்தொற்று இன்று (ஜூலை 17) சற்று அதிகரித்துள்ளது. புதிதாக இன்று 1,243 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.