தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நபிகள் நாயகம் சர்ச்சையை மறைப்பதற்கு ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு: கே.எஸ். அழகிரி ஓபன் டாக்! - நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்திக்கு சம்மன்

நபிகள் நாயகம் குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா அவதூறு கருத்து தெரிவித்ததையடுத்து, அதனை மறைப்பதற்காக மோடி அரசு அமலாக்கத்துறையை ஏவி ராகுல் காந்தி மீது பொய்யான குற்றச்சாட்டினை வைத்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சனம் செய்தார்.

கே.எஸ் அழகிரி
கே.எஸ் அழகிரி

By

Published : Jun 14, 2022, 7:21 PM IST

சென்னை:நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், இன்று (ஜூன் 14) இரண்டாவது நாளாக ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். இந்தநிலையில் இவ்விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், துணைத் தலைவர்கள், செயலாளர்கள், தொண்டர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ் அழகிரி, "நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்த பத்திரிகை காங்கிரஸ் கட்சியின் சொத்து. அனைத்தும் சட்டப்பூர்வமாகத் தான் நடந்தது. இன்றைக்கும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை காங்கிரஸிடம் தான் உள்ளது. அதை நாங்கள் ஆர்.எஸ்.எஸ் இடமோ, மோடி இடமோ எப்படி கொடுக்க முடியும்.

250 பேர் மீது வழக்குப்பதிவு: பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதால், அரபு நாடுகள் கடும் எதிர்ப்புத்தெரிவித்து வருகிறது. இதனால், இந்திய அரசின் அந்நிய செலாவணி குறைவதுடன், கச்சா எண்ணெய் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையெல்லாம் மூடி மறைப்பதற்காகவே மோடி அரசு இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. நூபுர் ஷர்மாவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டுமே போராடி வருகின்றனர், இந்துக்களும் போராட வேண்டும். நம் நாடு மதச்சார்பற்ற நாடு. அதுவே சகோதரத்துவம் ஆகும். நூபுர் ஷர்மாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று (ஜூன் 13)காங்கிரஸ் கட்சியினர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தை செய்தனர். அப்போது போராட்டக்காரர்களை அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர்.

இந்த நிலையில் அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரின்ஸ், செல்வப்பெருந்தகை, விஜயதாரணி உட்பட 250 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கின் வரலாறும்... முழுப் பின்னணியும்...

ABOUT THE AUTHOR

...view details