சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் கட்சிச் செயலாளர்கள் சஞ்சய்தத் சிரி வில்லா பிரசாத், கட்சி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கே.வி. தங்கபாலு, "குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பதை காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வடகிழக்கு மாகாணங்களில் அமைதியைத் தேடித் தந்தார். இந்தியா மிகச் சிறந்த நாடாக இருப்பதற்குக் காரணம் இந்தியாவில் அனைத்து மதம், மொழி இன மக்களுக்கு ஒரே நிலையில் ஒரே உரிமையில் எல்லோரும் சமமாக இருப்பதுதான்.