இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனாவின் கோரப்பிடியில் தமிழ்நாடு கடுமையாக சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் உள்ள மாநிலங்களில், கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது.
மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, போதிய ஆக்சிஜன் வசதியில்லாத நிலை போன்றவற்றால் உயிரிழப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.
கரோனா பரவலைத் தடுக்க கட்டமைப்பு வசதிகளை பெருக்குகிற வகையில் நிதியை ஒதுக்காமல், ஆதாய நோக்கத்தோடு நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற போர்வையில் சில முடிவுகளை தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிறது.
ரூபாய் 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை விரிவாக்கம், சாலை உறுதிப்படுத்துதல், போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசு தனது இணைய தளத்தில் டெண்டர் வெளியிட்டிருக்கிறது. கரோனா பேரிடர் காலத்தில் இத்தகைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அவசியமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த திட்டத்திற்காக மேலும் சுற்றுச் சூழல்கள் பெருமளவு பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. சல்லிகளின் தேவைக்காகவும், எம்.சாண்ட் தேவைக்காகவும் மலைகள் குடையப்பட வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுச்சூழல் எவ்வளவு பாதிக்கும் என்பதை கணக்கிட்டால் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. எனவேதான், சுற்றுச்சூழல் வழிகாட்டும் நெறிமுறைகளை முற்றிலுமாக புறக்கணித்து இந்த டெண்டர்கள் விடப்பட்டிருக்கின்றன.
கரோனா போன்ற பெருந்தொற்றில் இருந்து நாம் இன்னும் மீண்டிடாத நிலையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை கடன்சுமையிலும், பற்றாக்குறையிலும் அதலபாதாளத்திலிருக்கும் போது ரூபாய் 12 ஆயிரம் கோடியில் நெடுஞ்சாலைத் திட்டம் தேவையா. இந்த டெண்டரை விடுவதன் மூலம் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் பெறுவதற்கான முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டிருக்கிறது என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கரோனா பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விடுபட்டு சகஜநிலைக்குத் திரும்பிய பிறகு இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது தான் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் கடமையாக இருக்கமுடியும்.
எனவே, இன்றைய சூழலில் நெடுஞ்சாலைத் துறைக்கான டெண்டரை உடனடியாக ரத்து செய்து, அந்த நிதியைக் கொண்டு கரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்குப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.