சென்னை:தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (செப். 9) உத்தரவிட்டார். தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம்செய்யப்பட்டுள்ளார்.
பிகார் மாநிலத்தைத் சேர்ந்த ஆர்.என். ரவி 1976ஆம் ஆண்டு கேரளாவிலிருந்து இந்தியக் காவல் பணி அலுவலராகத் தேர்வாகினார். 2012ஆம் ஆண்டு இந்திய உளவுத் துறையின் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
புதிய ஆளுநர் ரவி
2018ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகப் பணியாற்றினார். தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். தற்போது, ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.என். ரவி நியமனம் தொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முழுக்க முழுக்க காவல் துறை பின்புறம் கொண்ட ஆர்.என். ரவியை, தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டு இருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.
இடையூறு செய்ய நியமனம்?
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இதுபோன்ற நியமனங்களில் மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது. இதனைக் கண்கூடாக கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்துவருவகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ள கே.எஸ்.அழகிரி, காவல் துறை முன்னாள்அலுவலரான கிரண்பேடியை புதுச்சேரி ஆளுநராக நியமித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே பார்த்தது எனக் கூறியுள்ளார்.
மேலும், விளம்பரமே கூடாது என்று செயல்படும் நேர்மையான ஆட்சி தந்துகொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையில் ஆர்.என். ரவியை மோடி அரசு ஆளுநராக நியமித்து இருக்கிறதோ என்று சந்தேகம் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி மூலம் தமிழ்நாட்டில் ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால் மக்களைத் திரட்டி காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என கே.எஸ். அழகிரி எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக அரசு சமூக நீதிக்கான அரசு - தொல். திருமாவளவன்