தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவையே புரட்டிப்போட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏராளமான பெண்கள் சீரழிக்கப்பட்டுள்ளனர். வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்திலிருந்து விடுதலை செய்வது மாபெரும் குற்றம். இந்தியாவைச் சேர்ந்த பெண் சமுதாயம் அவர்களை மன்னிக்காது.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்பட்ட பிரச்னைகளை விட பொள்ளாச்சி வழக்கு மிகவும் கொடூரமானது. இதில் முக்கியமான தலைவர்களும், அவர்களின் பிள்ளைகளும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அரசு இவ்வழக்கில் கவனக்குறைவாக செயல்படுவது தவறு. புதிய கல்விக் கொள்கை என்பது தரம், தகுதி ஆகிய வார்த்தைகளை கொண்டு இந்நாட்டின் சமூகநீதியை சீரழிப்பதற்கும், ஏழை, எளிய தொழிலாளிகளின் குடும்பத்திலிருந்து படிக்கும் மாணவர்களை வடிகட்டுவதற்கும் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய கேஎஸ் அழகிரி கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வும், பின்னர் நீட் தேர்வும் வைத்தால் மீண்டும் அவர்கள் குலத்தொழில்தான் செய்யமுடியும், கல்வியைப் பயிலவே முடியாது. தகுதி, திறமை போன்றவற்றை கூறி குலத்தொழிலை மறைமுகமாக வலியுறுத்துவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆரம்ப கொள்கையாகும். காமராஜர், பெரியார் போராடி பெற்ற கல்வி, சமூகநீதியை குழி தோண்டி புதைக்கின்ற செயலை அண்ணா, எம்ஜிஆர் ஆகிய தலைவர்களின் பெயரை கொண்டுள்ள அதிமுக செய்யக் கூடாது. அப்படி செய்தால் எங்கள் உயிரைக் கொடுத்தாவது அதைத் தடுப்போம்.
ரஜினிகாந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தகுதியானவர். அவருக்கு எந்த விருது வந்தாலும் அதனை நாங்கள் வரவேற்போம். ரஜினியுடன் அரசியல் ரீதியாக சில விஷயங்களில் நாங்கள் மாறுபடுகிறோமே தவிர, அவருடைய திறமை, தகுதி, பெருந்தன்மை ஆகியவற்றில் மாறுபாடு கிடையாது” என்று கூறினார்.
இதையும் படிங்க: ‘காந்தியின் கொள்கைதான் காங்கிரசின் பலம்’ - கே.எஸ். அழகிரி பெருமிதம்!