தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சீமான் தடித்த சொற்களை தவிர்க்க வேண்டும், இல்லையேல்..." - கே.எஸ்.அழகிரி வார்னிங்! - கேஎஸ் அழகிரி பேட்டி

சிறுபான்மையினர் தொடர்பாக சீமானுக்கு புரிதல் இல்லை என்றும், அவர் தடித்த வார்த்தைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் மக்களால் வெறுக்கப்படுவார் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Airport
கேஎஸ் அழகிரி

By

Published : Aug 6, 2023, 12:45 PM IST

"சீமான் தடித்த சொற்களை தவிர்க்க வேண்டும், இல்லையேல் மக்களால் வெறுக்கப்படுவார்" - கே.எஸ்.அழகிரி!

சென்னை:டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, இன்று(ஆகஸ்ட் 6) காலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஜனநாயக ரீதியான அரசியல் இயக்கம். காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இவர்தான் பிரதமர் வேட்பாளர் என சொல்லி தேர்தலை சந்தித்தது கிடையாது. ஆனால், இயல்பாகவே அதில் பிரதமர் வேட்பாளராக இருப்பார். தற்போது ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தொண்டர்கள் சொல்வார்கள். ஆனால் கட்சி அப்படி சொல்லாது. இதுதான் நேரு காலத்தில் இருந்து வரும் நிலைமை" என்றார்.

இந்தியா கூட்டணியின் பெயரை எதிர்த்த வழக்கு தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், "நாங்கள் என்ன நினைத்து அந்த பெயர் வைத்தோமோ, அது நடந்திருக்கிறது. நாங்கள் இந்தியர்கள். எனவே, இந்தியா என பெயர் வைத்து உள்ளோம். இந்தியா என பெயர் வைத்தது பெருமைதானே? இதற்கு மோடி ஏன் அச்சப்பட வேண்டும்? - மோடி அச்சப்படுவதோடு மட்டுமல்லாமல் நீதிமன்றம் வரை செல்கிறார். ராகுலுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள். ஆனால், இறுதியில் நீதிமன்றம் எங்கள் பக்கம்தான் தீர்ப்பு தந்துள்ளது. எனவே இந்தியா என்று பெயர் வைத்ததில் தவறில்லை" என்று கூறினார்.

சிறுபான்மையினர் தொடர்பான நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "சீமான் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள். இவர்கள் வேகமாகப் பேசி ஏதாவது அடையலாமா? என நினைக்கக் கூடியவர்கள். சிறுபான்மை, பெரும்பான்மை என்பது உலகம் முழுவதும் இருக்கக் கூடியது. தமிழகத்தில் நாம் பெரும்பான்மை. கேரளா சென்றால் சிறுபான்மை. இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றால் சிறுபான்மை. சீமான் போன்றவர்களுக்கு இது புரியாது. அவர் இதுபோன்ற தடித்த வார்த்தைகளைத் தவிர்த்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் மக்களால் புறக்கணிக்கப்பட்டு வெறுக்கப்படுவார்.

இலங்கையில் யுத்தம் ஏற்பட்டது. மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டது. எங்கேயும் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் காங்கிரஸ் அதை அனுமதித்தது இல்லை. இலங்கை போரில் மக்கள் அவதிப்பட்டபோது ராஜீவ்காந்தி விமானத்தில் உணவுப் பொருட்களை அனுப்பி உதவினார். தமிழகத்தில் இப்போது பேசிக் கொண்டு இருப்பவர்கள் யாராவது அதை செய்தார்களா? - மக்கள் துன்பப்படுவதை காங்கிரஸ் ஒருபோதும் வேடிக்கைப் பார்க்காது" என்றார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்த கேள்விக்கு, "அண்ணாமலை செல்வதை பாதயாத்திரை என சொல்லக் கூடாது. ராகுல்காந்தி 4,800 கிலோ மீட்டர் நடந்தார். தமிழகத்தில் வைகோ, குமரி ஆனந்தன் போன்றோர் நடந்துள்ளார்கள். ஆனால், அண்ணாமலை சொகுசு வாகனத்தில் செல்கிறார். ஒரு ஊர் வந்ததும் இறங்கி விடுவார். இதற்கு பெயர் நடைபயணமா? - இதனை அவர் பரப்புரை என்றுதான் சொல்லி இருக்க வேண்டும். நடப்பதற்குகூட அச்சப்படுபவர்கள் நாட்டில் என்ன செய்து விடப் போகிறார்கள்? - இது ஒரு கேலிக்குத்து. அண்ணாமலை நடைபயணத்தால் பாஜகவிலேயே எந்தவித தாக்கமும் ஏற்படாது. தமிழகத்தில் எந்தவித மாற்றமும் வந்துவிடாது. காரணம் இவர்கள் தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள்" என்று கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாற்றம் குறித்த கேள்விக்கு, "கட்சியில் மாற்றம் என்பது எப்போதும் இருக்கக் கூடியது. 3 ஆண்டுகள் முடிந்தாலே தலைவரை மாற்றி விடுவார்கள். நான் 5 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கிறேன். மாற்றினாலும் தவறில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் வலிமையாக இருப்பதால் மோடி அச்சப்படுகிறார். அடுத்து மும்பையில் கூட்டம் நடக்கவுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளின் பலம் இன்னும் கூடும். தமிழகத்தை பற்றி அமித்ஷாவிற்கு எதுவும் தெரியாது. அண்ணாமலைக்கு தமிழகத்தில் யாரும் அச்சப்பட மாட்டார்கள். அமலாக்கத்துறையால் ஒன்றும் செய்துவிட முடியாது. தைரியம் இருந்தால் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் மோடி போட்டியிடட்டும், அதன் பின்னர் பார்ப்போம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தேர்தலில் 40க்கு 40 பெறுவது தான் நம் லட்சியம் - திமுக கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details