சென்னை:துபாயில் நடைபெறும்சர்வதேச பல்தொழில் கண்காட்சியில் கலந்துகொள்ள நான்கு நாள் பயணமாக, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (மார்ச் 24) மாலை துபாய் புறப்படுகிறார். சர்வதேச பல்தொழில் கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்க உள்ளன.
இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. இந்த அரங்குகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அங்கு சர்வதேச தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்க பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுக்க உள்ளார்.
முதலமைச்சராகப்பொறுப்பேற்ற பின் முதலீடுகளை ஈர்க்க முதன்முறையாக ஸ்டாலின் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து சார்ஜாவில் உள்ள பல்கலைக்கழகம், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் உடன் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி, முதலமைச்சரின் தனிச்செயலர்கள் உதயச்சந்திரன், உமாநாத், அனுஜார்ஜ் உள்ளிட்ட 12 பேர் பயணம் மேற்கொள்ள உள்ளனர். தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வரும் மார்ச் 29ஆம் தேதி தமிழ்நாடு திரும்ப உள்ளார்.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம்' - அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்