தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2022, 8:52 PM IST

ETV Bharat / state

'சமூக நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றும் காரமான அரசு திமுக அரசு' - முதலமைச்சர் ஸ்டாலின்

'காரம்' எப்படி நோய்களில் இருந்து காக்கும் என்று மக்கள் நம்புகிறார்களோ, அதேபோல சமூக நோய்களிலிருந்து காப்பாற்றும் காரமான அரசு தான் திமுக அரசு என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெறுவதையொட்டி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்து கோயில் திருவிழாவில் எதிர்ப்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். உடனடியாக அங்கு சென்றேன். ‘சொந்தக்காரங்க வருவதைப்போல முதலமைச்சரே வந்துவிட்டார்’ என்று அந்த ஊர் மக்கள் சொன்ன சொல்லிலேயே இந்த ஆட்சியினுடைய இதயம் இருக்கிறது.

இந்த அரசாங்கத்தின் இதயம் என்பது, மிகக் கொடூரமான குண்டுவீச்சுக்கு மத்தியில், மரண பயத்தில் வாழ்ந்து வந்த உக்ரைன் நாட்டுக்கு படிக்கச் சென்ற தமிழ்நாட்டு மாணவர்களை மீட்டு வந்ததில் இருக்கிறது. 43 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகமாகி, பூமி செழித்தது அல்லவா? மண்ணைச் செழிக்க வைத்த மகிழ்ச்சியில் இருக்கிறது இந்த அரசாங்கத்தின் இதயம்.

காரமான அரசு:மாமல்லபுரத்தில் ஒரு நரிக்குறவப் பெண்ணின் மனதில் நம்பிக்கையை விதைத்ததில், அவரது சுயமரியாதையை நிலைநாட்டியதில் இந்த ஆட்சியினுடைய இதயம் இருக்கிறது. ஆவடியில் இருளர் இன மக்கள் இல்லத்திற்குச் சென்றபோது அவர்கள் கொடுத்த கறிக்குழம்பு காரமாக இருந்தது. ‘இவ்வளவு காரமாகவா சாப்பிடுகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். ‘ஆமாம், இவ்வளவு காரமாக சாப்பிடும் காரணத்தினால்தான் எங்களுக்குக் கரோனாவே வரவில்லை’ என்று சொன்னார்கள்.

இது அறிவியல் பூர்வமானதா என்பது வேறு. ஆனால், அந்த உணவின் காரத்தில் அவர்களது அன்பு வெளிப்பட்டது. இந்த அரசும் காரமான அரசுதான். காரம் எப்படி நோய்களில் இருந்து தங்களைக் காக்கும் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, அதேபோல சமூக நோய்களிலிருந்து காப்பாற்றும் என்று மக்கள் நம்பும் காரமான அரசுதான் திமுக அரசு.

இது திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று:இருளர் இன மாணவி வீட்டுக்கு நான் சென்றபோதுகூட தனக்கென எந்த வாய்ப்பு வசதியும் இல்லாத அந்தப் பள்ளி மாணவி, தன்னுடைய குடும்பத்திற்கு என எதுவும் கேட்கவில்லை. பக்கத்து வீட்டில், காது கேளாத ஒரு பையனுக்கு உதவி செய்யுங்கள் என்றே கேட்டார். பால்வளத்துறை அமைச்சர் நாசர் அந்தக் குழந்தைக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கிறார். இத்தகைய விளிம்பு நிலை மக்களுக்குச் செய்த உதவிகளில்தான் இந்த ஆட்சியினுடைய இதயம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

'பகுத்தறிவும், பாகற்காயும் கசக்கும். ஆனால், அவை இரண்டும் உடலுக்கு மிக மிக நல்லது' என்றார் கருணாநிதி. அத்தகைய காலத்தின் தேவையான 'திராவிட மாடல்' அரசுதான் இது. அரசு விழாக்கள் அல்லது சாலையில் போகின்றபோது, நிகழ்ச்சிகளுக்குப் போகின்றபோது மக்கள் என்னிடம் மனு கொடுக்கும்போது, சில பேர் சொல்வார்கள். 'எத்தனையோ தடவை மனு கொடுத்துள்ளேன், ஆனால் உங்கள் கையில் கொடுக்கும்போது நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது' என்று சாதாரண, சாமானிய மக்கள் சொல்லும்போது அவர்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைதான் இந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய நற்சான்று என்று நான் சொல்கிறேன்" என்று பேசினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு விடியல் வந்ததா ? நீட் முதல் திராவிட மாடல் வரை என்ன செய்தார் ஸ்டாலின்...?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details