தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹஜ் பயணம் சென்னையிலிருந்து தொடங்க வேண்டும் - அனுமதிகோரி முதலமைச்சர் கடிதம்

ஹஜ் புனிதப் பயணத்தை சென்னையிலிருந்து தொடங்க அனுமதிக்கக்கோரி ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஹஜ் பயணம் சென்னையிலிருந்து தொடக்கம்- அனுமதி கோரி முதலமைச்சர் கடிதம்
ஹஜ் பயணம் சென்னையிலிருந்து தொடக்கம்- அனுமதி கோரி முதலமைச்சர் கடிதம்

By

Published : Mar 17, 2022, 10:53 PM IST

சென்னை:தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர், முன்பிருந்ததுபோல் சென்னையிலிருந்து தங்களது பயணத்தைத் தொடங்கிட மீண்டும் அனுமதி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அவர்களுக்கு இன்று (மார்ச் 17) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், “2022ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாக சென்னை விமான நிலையத்தை அனுமதிக்க வேண்டுமென்றுகோரி பிரதமர் மோடிக்குக் கடந்த நவம்பர் 11, 2021ஆம் நாளன்று எழுதியுள்ள கடிதத்தின் மீது, ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்க்க விழைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் 4,000-க்கும் மேற்பட்டோர், சென்னையிலிருந்து சவூதி அரேபியாவிற்கு தங்களது பயணத்தைத் தொடங்குகின்றனர் என்றும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளிலிருந்து ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்பவர்கள் பயனடையும் வகையில் சென்னையிலிருந்து ஜெட்டாவிற்கும், அங்கிருந்து திரும்பி வருவதற்கும், 1987ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை நேரடி ஹஜ் விமானங்கள் இயக்கப்பட்டன’’ என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ’’2019ஆம் ஆண்டில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து 4,500-க்கும் மேற்பட்டோர், தங்களது ஹஜ் புனிதப் பயணத்தினை சென்னையிலிருந்து தொடங்கினர் என்றும், இந்தச் சூழ்நிலையில், இந்திய ஹஜ் குழு, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, ஹஜ் புனிதப் பயணப்புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை 21-லிருந்து 10-ஆகக் குறைக்கப்பட்டதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் தங்களது புனிதப் பயணத்தைக் கேரள மாநிலம், கொச்சியிலிருந்து தொடங்கிட அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளதை’’ முதலமைச்சர் தனது கடிதத்தில் விளக்கியுள்ளார்.

இஸ்லாமியர்களின் கோரிக்கை

தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர், கொச்சிக்குச் சென்று பயணத்தைத் தொடங்குவதால், 700 கி.மீ.க்கு மேல் கூடுதலாகப் பயணம் செய்ய வேண்டியுள்ளதோடு, பல சிரமங்களையும், கூடுதல் செலவுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தற்போது சவூதி அரேபிய அரசு பல நாடுகளிலிருந்து புனிதப் பயணமாக வருவோருக்கு கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள நிலையில், ஹஜ் புனிதப் பயணப்புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இதுதொடர்பாக இஸ்லாமியச் சமூகத்தினரிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரின் வசதியினைக் கருத்தில் கொண்டு, 2022ஆம் ஆண்டு சென்னையிலிருந்து தங்களது ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடுமாறு ஒன்றிய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரை ஸ்டாலின் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் 2022 - தொழில்துறையினரின் கோரிக்கைகள்

ABOUT THE AUTHOR

...view details