சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 22) தலைமைச் செயலகத்தில், மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், அழைக்கப்படும் முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியாட் தீபம் உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், சென்னை விமான நிலையத்தில் விளையாட்டு வீரர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு வரும் வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர், அதுகுறித்த விவரங்களை முதலமைச்சரிடம் எடுத்துரைத்தார். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம், போட்டிகள் நடைபெறும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து சுற்றுசூழல்-காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் எடுத்துரைத்தார்.