சென்னை: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாஜகவிற்கு எதிராக ஒரு வலுவான எதிரணியை உருவாக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் வேலைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாளை(ஜூன் 23) பீகார் தலைநகர் பாட்னாவில் தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேம்நாத் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்ட்ரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று(ஜூன் 22) சென்னையிலிருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இன்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் ஸ்டாலின் பாட்னாவுக்கு புறப்பட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டம் உள்பட இரண்டு கூட்டங்களில் கலந்து கொண்ட பிறகு, நாளை இரவு பாட்னாவிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.