சென்னை:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியான அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வு மையம் 17.12.2023 நாளிட்ட அறிவிக்கையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அதி கனமழையினை எதிர்கொள்ள முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் பேரில், பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் பெருமக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (17-12-2023) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதி கனமழையினை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும், உடன் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் பின்வரும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நில நிர்வாக ஆணையர் சு. நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திற்குத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அதிகாரி இரா. செல்வராஜ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வணிகவரித் துறை அதிகாரி பா.ஜோதி நிர்மலா, தென்காசி மாவட்டத்திற்கு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அதிகாரி சுன்சோங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை விரைந்து செயல்படுத்த ஊரக வளர்ச்சி இயக்குநர், பேரூராட்சிகளின் இயக்குநர் மற்றும் நகராட்சிகளின் இயக்குநரையும், கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையரையும் இம்மாவட்டங்களில் இருந்து பணிபுரிய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதில், கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையர் பிரகாஷ், ஊரக வளர்ச்சி இயக்குநர் பா. பொன்னையா, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சு.சிவராசு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிக கனமழை பெய்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குத் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 90 வீரர்கள் கொண்டு 3 குழுக்களும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும் விரைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு, தேசிய பேரிடர் மீட்புப் படையின் 50 வீரர்கள் கொண்ட தலா இரண்டு குழுக்களும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக விரைந்துள்ளன.
அதிக கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் பாபநாசம் அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 2.18 இலட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.