தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தொழில் துறை குறித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார். அதில், ''தொழில் வளர்ச்சியில், தமிழ்நாடு மேலும் மேன்மை அடையும் வகையில் சிப்காட் நிறுவனம் சிறுசேரி, நாவலூர் ஏரியினை தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், கரையினை உறுதிப்படுத்தி, நடைபாதை வசதி, சைக்கிள் பாதை வசதிகளுடன் பூந்தோட்டத்துடனான இயற்கை பூங்கா 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதன்மூலம் சிப்காட் சிறுசேரி தகவல் தொழிற்நுட்பப் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்களும், பொதுமக்களும் பயனடைவர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்கும் பொருட்டு, கெலவரப்பள்ளி அணைக்கட்டிலிருந்து நீரைப்பெற்று, அந்நீரை சுத்திகரித்து ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள சுமார் 355 தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும். இதற்கென நாளொன்றுக்கு 20 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம், 110 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்படும்.
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீட்டை ஈர்க்கும்வகையில், சென்னைக்கு அருகாமையில் சிப்காட் மாநல்லூர் தொழிற்பூங்காவில் மின்சார வாகனப் பூங்கா ஒன்று 148 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இத்தொழிற்பூங்கா அனைத்து அடிப்படை வசதிகளுடனும், மின்சார வாகன உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப ஆய்வு மையம், சோதனை மையம், கிடங்கு வசதி, கனரக வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும்.