சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.23) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, "கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்" மற்றும் "குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்" ஆகிய இரண்டு புத்தகங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் முகமது நசிமுத்தின், முதன்மைச் செயலாளர்/ தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த இரண்டு புத்தகங்களும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு துறைகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்ட "கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்" புத்தகத்தில், கொத்தடிமைத் தொழிலாளர் முறையின் காரணிகள் மற்றும் சட்ட விதிகள், கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கு எதிரான சட்டப்பூர்வ பாதுகாப்புகள், சட்ட அமலாக்க நடவடிக்கைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், பயிற்சி மற்றும் பயிலரங்கம் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், "குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்" புத்தகத்தில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், விழிப்புணர்வு பயிற்சி மற்றும் பயிலரங்கம், தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் சலுகைகள், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் தொடர்பான உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் போன்றவை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: அடுத்த தலைமை தகவல் ஆணையர் யார்..? முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!