தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

CM Stalin: மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர்.. நெஞ்சுவலி வரும் அளவுக்கு நெருக்கடி கொடுத்ததாக அறிக்கை!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்துள்ளார்.

CM Stalin: மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர்.. நெஞ்சுவலி வரும் அளவுக்கு நெருக்கடி கொடுத்ததாக அறிக்கை!
CM Stalin: மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர்.. நெஞ்சுவலி வரும் அளவுக்கு நெருக்கடி கொடுத்ததாக அறிக்கை!

By

Published : Jun 14, 2023, 11:09 AM IST

சென்னை: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்.

இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் சொல்லி இருந்தேன். அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில், தேவையில்லாத வகையில் அத்துமீறி, அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள்.

தலைமைச் செயலகத்திலேயே புகுந்து ரெய்டு நடத்துவோம் என்று காட்ட நினைத்திருக்கிறார்கள். இதனைக் கண்டித்து விரிவான அறிக்கையை நான் நேற்று மாலையே கொடுத்துள்ளேன். நான் மட்டுமல்ல, அகில இந்திய கட்சித் தலைவர்களும், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் இதனைக் கண்டித்துள்ளார்கள்.

ஏனென்றால், இது மாதிரி பாஜக இந்தியாவில் பல மாநிலங்களில் நடத்தி வருவதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் அறிவார்கள். அதுதான் இங்கும் நடக்கிறது. விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில் பாலாஜியை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது.

நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள். நள்ளிரவு 2 மணி வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும், சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் ஏன் செயல்பட வேண்டும்?

இந்த வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி அமலாக்கத் துறை அதிகாரிகள் இவ்வளவு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது தேவையா? அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிப்படுகிறது. என்ன வழக்கோ, அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார்.

எ ங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாகத் தொடர்வோம். இந்த வழக்கை சட்ட ரீதியாக திமுக உறுதியுடன் எதிர்கொள்ளும். பாஜகவின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது. இந்த அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து விட்டு, பின் அங்கு இருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க:3 நாட்கள் வரை செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படும் - மருத்துவமனை தகவல்

ABOUT THE AUTHOR

...view details