சென்னை: தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகள் கடந்தும், உரிமைத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் விமர்சித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம், அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி அன்று தொடங்கப்படும் என அறிவித்தார். இதில், நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் வீட்டு வேலை செய்யும் மகளிர் எனப் பல்வேறு வகைகளில் தங்களது விலை மதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் பெண்கள் 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தால் பயன்பெறுவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதேநேரம், அப்போதைய நிதி அமைச்சரான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், இந்த திட்டம் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் பொருந்தாது எனவும், இது பொருளாதார ரீதியாக கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார். இத்திட்டத்திற்கு 7,000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.