தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் துரைகண்ணு மறைவு: முதலமைச்சர், ஆளுநர்கள் இரங்கல் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த தமிழ்நாடு வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

tamilnadu cm, governors condolence for minister doraikannu death
tamilnadu cm, governors condolence for minister doraikannu death

By

Published : Nov 1, 2020, 10:33 AM IST

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு(72) சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு (அக் 31 ) காலமானார்.

இவரது மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு , உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்.

முதலமைச்சர், அமைச்சர்கள் அஞ்சலி

வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு எம்.ஜி.ஆர் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1972ஆம் ஆண்டு சேர்ந்து, திறம்பட பணியாற்றியவர். கட்சி மீது மிகுந்த பற்றும், கட்சி கொள்கைகளின் மீது உறுதியும் கொண்டவர். கழகம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றவர்.

எம்ஜிஆர் காலத்தில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவராக பணியாற்றிவர் என்ற பெருமைக்குரியவர். ஒரு செயலை செய்ய எண்ணி விட்டால், அதைச் செய்து முடிக்கும் மன உறுதி உடையவராக இருந்து, அதில் வெற்றி கண்டவர்.

ஆரம்ப காலத்திலிருந்தே கட்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் நலன்களுக்காக பாடுபட்டவர். என்னிடம் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் பழகியவர். அனைவரிடமும் விருப்பு, வெறுப்பின்றி அன்புடன் பழகும் பண்பாளர். மூன்று முறை பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக செயலாளராகவும், 15 வருடம் தொடர்ந்து பாபநாசம் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். தான் வகித்த பொறுப்புகளில் துடிப்புடன் பணியாற்றியவர் என்ற சிறப்புக்குரியவர்.

அமைச்சருக்கு மரியாதை செலுத்தும் முதலமைச்சர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த துரைக்கண்ணுவை 2016ஆம் ஆண்டு வேளாண்மைத் துறை அமைச்சராக நியமனம் செய்தார்.

துரைக்கண்ணு மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், எனக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுச் செய்தி அறிந்து வருத்தம் அடைகிறேன். அவர், எளிமை, பணிவு, நேர்மை, நிர்வாகத் திறன் மற்றும் விவசாய சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அறியப்பட்டவர்.

சட்டப்பேரவை உறுப்பினராக பாபநாசம் தொகுதியில் 2006 மற்றும்2011, 2016 ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அவர், 2016 ஆம் ஆண்டு முதல் வேளாண்மைத்துறை அமைச்சராக அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து தனது அடையாளத்தை பதிவு செய்தார்.

அவரது அகால மறைவு தமிழக மக்களுக்கும் குறிப்பாக அதிமுக கட்சித் தொண்டர்களுக்கும் இழப்பாகும். அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு அளவிட முடியாத இழப்பை தாங்கிக் கொள்ள தேவையான பலத்தை அளிக்க வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்வதுடன், அவருடைய ஆன்மா கடவுளின் நிழலில் இளைப்பாறவும் பிரார்த்தனை செய்கிறேன்" என அதில் கூறியுள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தஞ்சை தரணியின் மண்ணின் மைந்தராக சட்டப் பேரவையில் டெல்டா விவசாயிகளின் குரலாக ஓங்கி ஒலித்து தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சராக உயர்ந்த துரைக்கண்ணு மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details