சென்னை: ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி. நகர், தனியார் ஓட்டலில், சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2022-ல், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "பெங்களூர், சென்னை மட்டுமல்ல; உலக அளவில் பல பெருநகரங்களில் ஏற்படும் வெள்ளம் தெலங்கானாவில், உத்தராகண்டில் மேகவெடிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள், கேரளாவில் ஏற்படும் நிலச்சரிவுகள் - என எல்லாப் பக்கமும் நாம் பேரிடர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
வளிமண்டத்தில் உள்ள கார்பனின் அளவு அதிகரித்ததன் காரணமாக, புவியின் வெப்பநிலை அதிகரித்து காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதன் காரணமாக, மனிதர்கள் மட்டுமல்லாமல் பல்லுயிர்களும் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பின் விளைவுகளைத்தான் நேரடியாகக் கண்டு வருகிறோம். இவை நமக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து நாடுகளுக்குமான பிரச்சினை! காலநிலை மாற்றத்தை உலகம் எதிர்கொள்ள, அதன் தாக்கத்தை மட்டுப்படுத்த, 2050-ஆம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை எட்டவேண்டும் என்று பல்வேறு பன்னாட்டு ஆய்வுகளும் உச்சி மாநாடுகளும் அறிவுறுத்துகின்றன.
கடந்த ஆண்டு க்ளாஸ்கோவில் (Glasgow) நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் அவர்கள், "இந்தியா வரும் 2070-ஆம் ஆண்டிற்குள் கார்பன் சமநிலையை எட்டிவிடும்" என்று அறிவித்திருந்தார். இது எவ்வளவு தீவிரமான பிரச்சினை என்பதைத்தான் பிரதமரின் உரையும் உணர்த்துகிறது. கடந்த ஆண்டு கழக அரசு பொறுப்பேற்றதும் பல முன்னெடுப்புகளை அறிவித்து செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது. துறையின் பெயரை "சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை” என்று அறிவித்தோம்.
தமிழகத்திற்கான காலநிலைத் திட்டத்தை அறிவித்தோம். நிதிநிலை அறிக்கையில் அதற்கென 500 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறோம்.தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழகத்தின் காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் நான் துவக்கி வைத்தேன்.
இதுவரை சுமார் 2.8 கோடி மரக் கன்றுகள் பதியன் போடப்பட்டு, அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கார்பனை உள்வாங்கவும் பயன்படும். பொதுவாகவே வெப்பமண்டல நாடுகளில் உள்ள காலநிலையை, பருவங்களை கணிப்பது கடினம்.
இதற்காகவே அண்ணா பல்கலைக்கழகத்தில் "காலநிலை ஸ்டூடியோ" ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு என தனியான மாதிரிகளை உருவாக்கவும் அதற்கான ரேடார்களை அமைக்கவும் 10 கோடி ரூபாயை ஒதுக்கி, திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். ஒரு மாநிலத்தை கார்பன் சமநிலையை எட்டிய மாநிலமாக அறிவிக்க வேண்டுமெனில், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் கார்பன் சமநிலையை அடையவேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள 10 கிராமங்களை மீள்தன்மையுடைய கிராமங்களாக மாற்றுவதற்கு திட்டம் இன்று துவக்கப்படுகிறது. காலநிலை மாற்றம் குறித்து பள்ளி - கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க "காலநிலை அறிவு இயக்கத்தை" (Climate literacy) தமிழகத்தில் செயல்படுத்தப்போகிறோம். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.