சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், ''பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த புரட்சியாளர், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்-இன் பிறந்தநாளில் என் புகழஞ்சலியைச் செலுத்துகிறேன். சமூக நீதிக்கான பணியை அச்சமின்றி முன்னெடுத்து, அனைவரையும் ‘இட ஒதுக்கீடு எங்கள் உரிமை’ என ஓங்கி முழங்கச் செய்தவர் அவர்.
வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு அதிகாரமளிக்கும் இலக்கில் வி.பி.சிங்கும், தலைவர் கலைஞரும் ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள் ஆவர். வி.பி. சிங் சிந்தனைகள் மேலும் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழி நடத்தட்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
வி.பி.சிங் என்று அறியப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங் உத்தரப் பிரதேசத்தில் ‘தையா’ என்ற ராஜவம்சத்தில் 1931ஆம் ஆண்டு ஜுன் 25ஆம் தேதி பிறந்தார். ராஜவம்சத்தில் பிறந்தாலும் அவரின் சிந்தனைகள் யாவும் ஏழை மக்களின் வாழ்க்கை குறித்தே இருந்தது. அதற்கு உதாரணமாக, ஆச்சார்யா வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்தில் பங்கேற்ற அவர், தனது நிலங்களை தானமாக அளித்தார்.
ஒரு பிரிவினரைத் தவிர பெரும்பான்மை மக்கள் ஏழைகளாக இருப்பதை மாற்ற வேண்டும் என்று எண்ணியவர், அதற்கு அரசியல் அதிகாரம் தான் சரியான வழி என்று தேர்ந்தெடுத்த அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1969ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரானார். பின்னர் கட்சியில் மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுத்த சிங், 1980ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார்.