சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த மருத்துவமனைக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த மருத்துவமனைக் கட்டடம், தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனை இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை போன்ற உயர்சிறப்பு பிரிவுகளை கொண்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு அழைப்பு விடுப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(ஏப்.27) டெல்லி செல்கிறார். நாளை இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்று தமிழ்நாடு இல்லத்தில் தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை மறுநாள்(ஏப்.28) காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்கிறார்.
ஜூன் 3ஆம் தேதி திருவாரூரில் நடைபெறவுள்ள கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் கலைஞர் கோட்ட வளாகம் திறப்பு மற்றும் சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு முர்முவுக்கு அழைப்பிதழ் வழங்கி, நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கவுள்ளார். திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அங்கிருந்து காணொலி காட்சி வாயிலாக கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளதாக தெரிகிறது.
மேலும், தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய பல்வேறு சட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ள நிலையில், ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க அறிவுறுத்த வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் ஸ்டாலின் வலியுறுத்தவுள்ளதாக தெரிகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி பயணத்துக்கு முன்னதாக இன்று மாலை, "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், மீனவச் சங்கப் பிரதிநிதிகள், சுய உதவிக்குழுக்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் இதர பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக, காவல் துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்துகிறார்.
இதையும் படிங்க: Parkash Singh Badal: பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பர்காஷ் சிங் பாதல் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!