சென்னை:கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. குறிப்பிட்டு, அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும்.
இதுதொடர்பாக, கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று, தங்களிடம் நேரிலும், ஏப்.15ஆம் தேதியன்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் தான் எழுதிய கடிதத்திலும், அவருடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போதும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருந்ததோடு, இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான பொருள்களையும், உதவிகளையும் வழங்குவதற்கு ஒன்றிய அரசின் அனுமதியைக் கோரியிருந்தேன்.
ஆனால், இந்தக் கோரிக்கை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கப்பெறவில்லை. இதற்கிடையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அத்தியாவசிப் பொருள்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.