தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நிர்வாக காரணங்களுக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்" - முதலமைச்சர் ஸ்டாலின்!

நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டாலும் தொழில்துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவு தொடரும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
தொழில்துறை

By

Published : May 11, 2023, 3:45 PM IST

சென்னை:ஹூண்டாய் நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வது தொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கும் ஹூண்டாய் நிறுவனத்திற்கும் இடையே இன்று(மே.11) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 100 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 5 சார்ஜிங் நிலையங்கள், இரட்டை அதிவிரைவு சார்ஜிங் நிலையங்களாக அமைய உள்ளதாகவும், மற்ற சார்ஜிங் நிலையங்களில் 10 நிலையங்கள் 150 கிலோ வாட் திறனுடனும், 85 நிலையங்கள் 60 கிலோ வாட் திறனுடனும் ஒற்றை விரைவு சார்ஜிங் நிலையங்களாக அமைய உள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு ஆண்டில் 1 லட்சத்து 78 ஆயிரம் மின்சார வாகன பேட்டரிகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் ஹூண்டாய் நிறுவனம் புதிய தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைப்பதுடன், புதிய மாடல் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 8 லட்சத்து 50ஆயிரம் வாகனங்கள் உற்பத்தியாகும் நிலையில், அதன் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், "1996ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கருணாநிதி ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் அலகிற்கு அடிக்கல் நாட்டினார். 2008ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் இரண்டாம் தொழிற்சாலையும் தொடங்கப்பட்டது.

தற்போது இந்த நிறுவனத்தின் முதலீடு 23,900 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாகத் திகழ்கிறது.

தமிழக அரசு மற்றும் ஹூண்டாய் நிறுவனம் இடையே ஒப்பந்தம்

மின் வாகனத் தயாரிப்பில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவாகியுள்ளது பாராட்டுக்குரியது. 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் முதலீடு இலக்கை எட்டுவதற்கு இந்த பாச்சல் உதவிகரமாக இருக்கும். நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டாலும் தொழில்துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவு என்றும் தொடரும். தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டிஆர்பி ராஜா முனைப்புடன் செயல்பட்டு தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் மற்றும் ஹூண்டாய் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகள்" - நிதியமைச்சர் பொறுப்பு குறித்து பிடிஆர் உருக்கம்!

ABOUT THE AUTHOR

...view details