குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நாளை (ஜூன் 12) கடைப்பிடிக்கப்படுவதை ஒட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”உலகெங்கும் நிலவி வரும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இப்பூமியில் பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை, கல்வி உரிமை மிக இன்றியமையாததாகும். அந்த உரிமைகளை அவர்களிடமிருந்து பறிப்பது இயற்கையின் நியதிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது.
குழந்தைகள் கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தால் மட்டுமே நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு, குழந்தை தொழிலாளர் முறை என்ற கொடுமையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தினையும் முறையான கல்வியினையும் வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில், வேலையில் ஈடுபடுத்தப்படும் குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்து, சிறப்புப் பயிற்சி மையங்களில் அக்குழந்தைகள் கல்வி கற்கவும், அவர்களுக்கு விலையில்லா சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள், கல்வி உபகரணங்கள், சத்தான மதிய உணவு, கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், மடிக்கணினிகள் வழங்கி வருவதோடு, உயர் கல்வி பயிலும் முன்னாள் குழந்தை தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்விக் காலம் முழுமைக்கும் 500 ரூபாய் வீதம் மாதாந்திர உதவித் தொகை வழங்குதல் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
மேலும், 18 வயது நிறைவடையாத வளர் இளம் பருவத்தினர் அபாயகரமான பணிகளில் அமர்த்தப்படுவதை முற்றிலுமாக தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட சட்டத் திருத்தத்தினை தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்தி, குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதில், இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
‘குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம்’ என்பதை உணர்ந்து, குழந்தைகளின் உரிமைகளை மதித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட, அரசு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கும் திட்டங்களுக்கும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கல்வி குழந்தையின் பிறப்புரிமை! அதை அவர்களுக்கு கொடுப்பது நமது கடமை!” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :தமிழ்நாட்டின் முதல் நீண்ட ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்