சென்னை:மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில், பேரவை உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இன்று (மே 4) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்குப் பதிலளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மருத்துவத்தின் தந்தை என குறிப்பிடப்படும் ஹிப்போகிரேட் பெயரிலேயே உலகளவில் பெரும்பாலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் (White coat ceremony)யின் போது உறுதிமொழி ஏற்பர். சில நாட்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் மகரிஷி சரக் ஷப்த் என சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கப்படும் என செய்திகள் பரவின. அப்போதே சுகாதாரத்துறை செயலாளரிடம் கூறி மருத்துவமனை முதல்வர்களுக்கு இந்த செய்தியால் எந்தவித குழப்பமும் ஏற்படாமல் இருக்கும் படி அறிவுறுத்தினேன்.
முதல்வர் மீண்டும் நியமனம்: மேலும் இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்பட்டபோது இந்த உறுதிமொழியை ஏற்பது என்பது விருப்பத்தின் பெயரிலேயே ஏற்கலாம் என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த உறுதிமொழியை எந்த மொழியிலும் எடுக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், பிற்காலத்தில் சமஸ்கிருதத்தில் மட்டுமே ஏற்க வேண்டும் எனக் கூறப்பட்டது.