தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணை டிச. 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. எனவே இதுகுறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடக்க உள்ளது. இதில் அமைச்சர்கள், தலைமை செயலர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தேர்ந்தெடுக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் நேரடியாக வாக்களித்து மேயரை தேர்வு செய்து வருகின்றனர். ஆனால் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மேயர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதை மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சி விரும்புகிறது.