தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு வரவு-செலவுத் திட்ட அறிக்கை: தொழில் துறை எதிர்பார்ப்புகள் என்ன? - Finance Minister PTR

நாளை (ஆகஸ்ட் 13) தமிழ்நாட்டின் பட்ஜெட் (வரவு-செலவுத் திட்ட அறிக்கை) சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்துவருகிறது.

தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாடு பட்ஜெட்

By

Published : Aug 12, 2021, 12:24 PM IST

சென்னை: தமிழ்நாடு வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் தங்களது கோரிக்கைகள் இடம்பெற வேண்டும் எனக் வலியுறுத்திவரும் தொழில் துறையினரிடம் ஈடிவி பாரத் சார்பாகப் பேசினோம். அதன் சுருக்கம் இதோ...

  • தமிழ்நாடு அரசு சிறு, குறு நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறார் டான்ஸ்டீயாவின் பொதுச்செயலாளர் வாசுதேவன்.

இது தொடர்பாகப் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு பன்னாட்டு நிறுவனங்களையெல்லாம் தமிழ்நாட்டுக்கு அழைத்து அவர்களுக்கு வரிச் சலுகை, மானியங்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. ஆனால் அப்பெரும் நிறுவனங்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில்லை.

நிலவரையறையை ஒற்றைச்சாளர முறையில் சரிசெய்க

பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு நிறுவனம் முதலீடு செய்தாலும் அதன்மூலம் குறைந்த அளவுக்கே வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் குறைந்த செலவில் உற்பத்திச் செய்தாலும் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துவருகிறது.

இதனைக் கருத்தில்கொண்டு சிறு நிறுவனங்களுக்குச் சிறப்புத் திட்டங்களை வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் அறிவிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அதிகரித்தால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும். சிறு நிறுவனங்களுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறை இருக்கிறது.

இதனை மாற்றியமைக்க வேண்டும். சிறு நிறுவனங்கள் வரி செலுத்தும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். நிலவரையறையை ஒற்றைச்சாளர முறையில் சரிசெய்ய வேண்டும்" எனக் கோரிக்கைவிடுக்கிறார்.

தொழிற்சாலைகளுக்குத் தனிக் கவனம் செலுத்துக

  • காக்கலூர் தொழிற்பேட்டையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் வழங்கும் பாஸ்கரன், தமிழ்நாடு அரசு சிறு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட வேண்டும் என்கிறார்.

இது பற்றி அவர், "கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய தொழில்கள் தொடங்கப்படுவது குறைந்துள்ளது. இதனைச் சரிசெய்ய இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் திட்டங்களை அரசு வெளியிட வேண்டும். இதன்மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்" என யோசனை கூறுகிறார்.

கரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பெரு நிறுவனங்கள் மீண்டும் இயங்கினாலும் ஏராளமான சிறு தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படாமலேயே உள்ளன. இவற்றிற்கும் அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டுமென தொழில் துறையினர் கோரிக்கைவைக்கின்றனர்.

பத்திரப்பதிவு கட்டணத்தைக் குறைக்க

மேலும், கரோனா தொற்று முதல் அலையின்போது மத்திய அரசு, ரிசர்வ் வங்கி உள்ளிட்டவை நிவாரணம், கடனுதவி உள்ளிட்டவற்றை வழங்கினாலும் - இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மீள முடியாத நிலையில் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். இதனையும் அரசு கருத்தில்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மருத்துவ ஆக்சிஜனுக்கான பற்றாக்குறை ஏற்பட்டபொழுது தமிழ்நாடு அரசு தொழில் துறையில் உள்ள ஆக்சிஜனை மருத்துவமனைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டது. இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டாலும் ஆக்சிஜன், பேபிரிக்கேஷனை நம்பி தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு மேல் தொழில் நடத்த முடியாத சூழல் நிலவியது.

  • இதுபோன்றவர்களுக்கு அரசு சார்பில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் வலியுறுத்தினர். தமிழ்நாட்டில் நாட்டிலேயே அதிக அளவில் பத்திரப்பதிவுக் கட்டணம் உள்ளதாகக் கூறும் கட்டுமான துறையினர், இதனைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

உணவகங்களுக்கு உள்ளீட்டு வரியைக் குறைக்க

இது பற்றி பேசிய கிரடாய் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணன், "பத்திரப் பதிவுக் கட்டணம், முத்திரைத் தாள் வரி சேர்ந்து தமிழ்நாட்டில் 11 விழுக்காடு புதிய கட்டுமானங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. இதனைக் குறைத்தால் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும். அரசுக்கும் வரி வருவாய் அதிகரிக்கும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான துறையினருக்கு அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் இதுபோன்ற சலுகைகளை அளித்தது" என்றார்.

  • உணவகத் துறையினருக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்பதே அவர்களது பிரதான கோரிக்கை.

இது பற்றி நம்மிடம் பேசிய சென்னை ஹோட்டல் சங்கத் தலைவர் ரவி, "பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களின் நிதிநிலை மோசமாக உள்ளது. உணவகங்களுக்கு உள்ளீட்டு வரி உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தர வேண்டும் என நிதியமைச்சரிடம் கோரிக்கைவைத்துள்ளோம்" என்றார்.

வரலாறு காணாத பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களும், வியாபாரிகளும் அரசின் உதவியை நம்பி வரவு-செலவுத் திட்ட அறிக்கையை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: பட்ஜெட் 2021: புதுமையை புகுத்தியிருப்பாரா பிடிஆர்... ஓர் அலசல்!

ABOUT THE AUTHOR

...view details