சென்னை:சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் கேரளாவின் கண்ணூர் உள்பட பல இடங்களில் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வை கண்டித்தும், இந்தி மொழி குறித்தும் பேசி வருகிறார்.
இந்தித் திணிப்பை தமிழ்நாடு பாஜக எந்தவிதத்திலும் ஏற்காது. இந்தியை திணிக்க முயற்சித்தால் பாஜக எதிர்க்கும். தாய்மொழி தமிழால் மட்டுமே நமக்குப் பெருமை. இந்தியால் எந்த பெருமையும் இல்லை. தமிழை இந்தியாவின் இணைப்பு மொழியாக்க தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டும்" என்றார்.
புதிய கல்வி கொள்கையில் இந்தி விருப்ப பாடம்:தொடர்ந்து பேசிய அவர், "2010ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது தான், சியுஇடி (CUET) எனும் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு. 75 மத்திய பல்கலைக்கழகங்களிலும் இத்தேர்வு நடக்கும். ஆங்கிலம், இந்தி, தமிழ் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். 2019, 2020இல் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்ததால், தமிழ்நாடு கல்வித் தரம், மத்திய கல்வி தரத்திற்கு உயர்ந்துள்ளது. அதனால்தான் நீட் தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி பெறுகின்றனர்.
பொதுநுழைவுத்தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒருதலைப்பட்சமாக மத்திய அரசை குறை சொல்லக் கூடாது. காங்கிரஸ் அரசு கொண்டுவந்த தேர்வு இது. இத்தேர்வு மூலம் தாய்மொழியில் இந்தியா முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் தேர்வெழுத வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியப் பல்கலைப் பொதுத்தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய கல்வி கொள்கையில் இந்தி விருப்ப பாடமாகவே இருக்கிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருந்தால் நாங்கள் உச்சகட்ட பெருமை அடைவோம். அந்த நிலையை கொண்டுவர முதலமைச்சர் ஏதாவது முயற்சி எடுத்துள்ளாரா?.
ஏ.ஆர். ரஹ்மானுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது:கடந்த 10 ஆண்டுகள் முன்பு தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது அது 3.70 லட்சமாக குறைந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் குறைந்தது 10 தமிழ்ப்பள்ளிகளை தமிழ்நாடு அரசின் செலவில் நடத்த முதலமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும்.
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராடிய தமிழ் ஆர்வலர் கி.ஆ.பெ.விசுவநாதன், தனது இறுதிக்காலத்தில் வருந்தினார். ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது அனைவருக்கும் பெருமை. தமிழ் இந்தியாவின் இணைப்பு மொழியாக வேண்டும் என்று கூற அவருக்கு கருத்துச் சுதந்திரம் உள்ளது.
தமிழுக்கு Quality இருக்கு; ஆனா Quantity இல்ல:வட இந்திய மாணவர்கள் தென்னிந்திய மொழிகளை படிக்க வேண்டும் என்பதால்தான் மும்மொழிக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தாய்மொழி தமிழ்தான் நமக்கு பெருமை, இந்தியால் நமக்கு பெருமையில்லை.
எனக்கு அந்நிய மொழியான ஆங்கிலமும், இந்தியும் ஒன்றுதான். கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் ஆசிரியர்களை குறைப்பது மத்திய அரசின் நோக்கமல்ல. அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் இரண்டாவது மொழியாக இருந்த இந்தியை, 2019இல் விருப்ப மொழியாக்கியது பாஜக தான்.
பல தமிழர்கள் விருப்பப்பட்டு இந்தியைப் படிக்கின்றனர், அதற்கான தரவுகள் இருக்கின்றன. இன்றைய உலகில் ஐந்து மொழிகள் கூட ஒருவருக்கு போதாது. குறைந்தது இரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். தனியார் பள்ளிகள் சில நான்கு மொழிகளை கற்றுத்தருகின்றன. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்திதான். தொன்மை, முதுமை, பழைமை என இந்தியாவின் இணைப்பு மொழியாவதற்கான quality (குவாலிட்டி) தமிழுக்கு இருக்கிறது. ஆனால் quantity (குவாண்டிட்டி) இல்லை. அதாவது, அதிகமானோர் பேசவில்லை. அதிகமானோரை பேச வைக்க என்ன முயற்சி எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் வரை அனைத்து தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், பாஜக அண்ணாமலையின் இந்த கருத்து அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆங்கிலத்துக்கு மாற்று இந்திதான் - அமித் ஷா சர்ச்சை கருத்து!