சென்னை: தியாகராய நகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சின்னப்பா கணேன் என்பவர் எழுதிய 'மோடியின் தமிழகம்' என்ற புத்தகத்தை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. 10 சதவீத இடஒதுக்கீடு என்பது ஏற்கெனவே இருக்கக்கூடிய இடஒதுக்கீட்டை பாதிக்காது. இருப்பினும் திமுகவினர் பொய் பிரசாரத்தை மேற்கொண்டு, உச்ச நீதிமன்றத்திற்குச்சென்றனர். ஆனால், இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த காலத்தில் சட்டநாதன் ஆணையம் மற்றும் மதமாற்ற தடைச்சட்டத்திற்கு எதிராக செய்தது போல் மீண்டும் திமுக இந்த சட்டத்திற்கு எதிராக விசமத்தனமான பிரசாரத்தை செய்து வருகிறது. இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் ஓபிசி மக்கள் அதிகம் இருக்கும் மாநிலம், தமிழ்நாடு. அதனால் தான் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து வரும் காலத்தில் பேசலாம். இன்று இந்த தீர்ப்பை வரவேற்கலாம்.
அமைச்சர் நாசர் குழம்பியுள்ளாரா...? இல்லை மக்களை குழப்புகிறாரா...? எனத் தெரியவில்லை. பால் விலை உயர்வால் விவசாயிகளுக்கு 3 ரூபாய் தான் கிடைக்கும். ஆனால், ஆவினுக்கு 12 ரூபாய் லாபம் கிடைக்கும், எனவே தான் விவசாயிகளுக்கு எந்தப்பலனும் தராத பால் விலை உயர்வைக்கண்டித்து வரும் 15-ம் தேதி, தமிழ்நாட்டில் அனைத்து ஒன்றிய தலைநகரங்களிலும் 1,200 இடங்களில் தமிழ்நாடு பாஜக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சி, எனவே 2024-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தில் தவறில்லை. தேசிய ஐனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது.
அதிமுக, பாஜகவினர் ஒரே கூட்டணியில் தான் இருக்கிறோம். குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து இல்லாமல் பாஜகவினர் அனைத்துத் தொகுதியிலும் வேலை செய்கிறோம். 5 ஆண்டுக்கு ஒருமுறை தொகுதியின் தன்மை மாறும். எனவே, அனைத்துத்தொகுதிகளிலும் பாஜக வேலை செய்து வருகிறது.
ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்ற திமுகவின் கருத்து அபத்தமானது, கீழ்த்தரமானது. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் தங்களுக்கு அடிமை என காட்ட இவ்வாறு கூறுகின்றனர். தமிழ்நாட்டிற்கு விரோதமாக ஆளுநர் இருப்பதாக கூறும் திமுக ஆதாரப்பூர்வமாக குற்றம்சாட்ட வேண்டும். ஆளுநருக்கு எதிரான மனநிலையில் இருந்து திமுக வெளிவர வேண்டும். ஆளுநரை முரசொலியில் தரக்குறைவாக எழுதுகின்றனர்.
திருமாவுக்கு வேலை இல்லாமல் மனுஸ்மிருதியை பிரதி எடுத்து வழங்கி வருகிறார். ஆர்எஸ்எஸ் குறித்த அம்பேத்கர் கருத்தை திருமாவளவன் படிக்க வேண்டும். திருமாவளவன் பிரதி எடுத்து கொடுக்கும் மனுஸ்மிருதியின் மொழி பெயர்ப்பு தவறானது. மனுஸ்மிருதி குறித்து தவறாக மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்திலிருந்து இதுதான் மனுஸ்மிருதி என பரப்பி வருகின்றனர். ஆர்எஸ்எஸ் மீது பொய்யான கருத்தைப் பரப்பி வருகின்றனர் .
அமித் ஷா வருகை குறித்து அதிகாரபூர்வமாக இன்னும் தகவல் வரவில்லை. பிரதமர் வருகை உறுதி. தமிழ்நாடு பாஜக சார்பில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு வழக்கப்படும். நேற்று சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு வெளியான 7 இடங்களில் காங்கிரஸ் பல இடத்தில் டெபாசிட் பெறவில்லை. 2024-ல் பல கட்சிக்கு முடிவுரை எழுதப்படும். எந்த கட்சி பலமானது என்ற உண்மை 2024 தேர்தலில் தெரியவரும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:'நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு' - EWS 10% இட ஒதுக்கீடு தீர்ப்புக்கு முதல்வர் கருத்து!