சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "திமுக மீது மக்களுக்கு கோபம் வரும்போதெல்லாம் திமுக கையில் எடுக்கும் ஆயுதம் இந்தி எதிர்ப்பு. 1966 முதல் 2022 வரை திமுக செய்த சாதனை தமிழக அரசுப் பள்ளியில் கூட தமிழைக் கட்டாயமாக்க முடியவில்லை என்பதுதான். புதிய கல்விக் கொள்கை மூலமே தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திமுகவினர் நடத்தும் பள்ளியில் தமிழ் கட்டாய பாடமாக இல்லை. அங்கெல்லாம் 3வது மொழியாக இந்தி இருக்கிறது. குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டியை ஆட்டும் செயல் முதலமைச்சரின் செயல்.
மும்மொழி கொள்கையில் மூன்றாவது மொழி விருப்ப பாடம்தான். ஆட்சிக்கு வந்து 9 ஆண்டில் பாஜக எங்கும் இந்தியை திணிக்கவில்லை. பிரதமரே குஜராத்திதான். பிறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலுக்காகத்தான் அவர் இந்தியை கற்றுக் கொண்டார். இந்தியை பயன்படுத்தும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. எனவே இந்தியை கட்டாயமாக தமிழகத்தில் கொண்டுவர மாட்டோம்.
இந்தி திணிப்பு எனும் பெயரிலான திமுகவின் போராட்டம் படுதோல்வி அடைந்துள்ளது. இந்தி எதிர்ப்பு நாடகத்திற்கு எதிர்மறையாக திமுக நடந்து கொண்டுள்ளது. ஐஐஎம், ஐஐடியில் இந்தி கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு அறிக்கை அளித்தது உண்மை என்றால், முதலமைச்சர் அதை காட்ட வேண்டும். பிரதமர் அலுவலகம் உட்பட எங்கு வேண்டுமானாலும் திமுக போராடட்டும், ஆனால் போராட்டத்தில் உண்மை இருக்க வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது 2, 3 காலிகள் சேர்ந்து நடத்தும் போராட்டம் என விமர்சித்தார் பெரியார்.