சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறுகையில், “3 மாதத்திற்கு ஒரு முறை நடக்கக் கூடிய மாநில நிர்வாகிகள் கூட்டம்தான் இன்று நடைபெறுகிறது. தனது உடல்நிலை சரியில்லை என்றாலும், சிறிது நேரம் இன்றைய கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார். கூட்டணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து தேசிய தலைமை அறிவிக்கும்” என கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்றைய முன்தினம் (அக்.3) நடைபெற இருந்த மாநில பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு, மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாமல் நடைபெற்றது.
இதனிடையே, பாஜக உடன் கூட்டணி முறிவு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் கேட்டு தமிழ்நாடு பாஜகவிற்கு அறிக்கை அனுப்பி இருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்துப் பேசினார்.