சென்னை: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாகவும், நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாகவும், அதிமுக-பாஜக கூட்டணிக்குள் ஏற்படுள்ள பிரச்சினை தொடர்பாகவும், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 14) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அண்ணாமலை, “தமிழகம் நேற்று பெருமை அடைந்துள்ளது. நீட் தேர்வு மூலமாக மாணவர் பிரபஞ்சன் பெருமையை தேடி தந்துள்ளார். அதேபோல் முதல் 10 ரேங்கில் 4 பேர் தமிழகத்தில் இருந்து வந்துள்ளனர். அவர்களை வாழ்த்துகிறேன். இந்த வருட நீட் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் அதிகம். நீட்டை எதிர்க்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு, இந்த தேர்வு முடிவு ஒரு பாடம். தமிழக மாணவச் செல்வங்கள், ஏழை மாணவர்கள், விவசாயிகளின் குழந்தைகள் அனைவரும் நீட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அமலாக்கதுறை ரெய்டு நடக்கிறது. கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. கண்டனக் குரலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது பணத்தை வாங்கிக் கொண்டு வேலைக்கு சிபாரிசு செய்துள்ளார் என்பது குற்றச்சாட்டு. பணம் கொடுத்தும் வேலை கிடைக்காத அருள் மொழி புகார் அளித்துள்ளார். அதில் ஏ1 ஆக செந்தில் பாலாஜியை குறிப்பிட்டுள்ளார்.
திமுக பொறுப்பேற்ற பிறகு செந்தில் பாலாஜிக்கு 2 துறைகள் ஒதுக்கப்பட்டன. அவர்கள் பொறுப்புக்கு வந்ததும் இந்த வழக்குகள் எவ்வளவு வேகமாக நகர்ந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும். பணத்தை திரும்பக் கொடுத்ததாகக் கூறி வழக்குகளை திரும்பப் பெற்றனர். லஞ்சம் பெறப்பட்ட வழக்கில் காம்பரமைஸ் ஆனதை இந்திய வல்லுனர்களே ஆச்சர்யமாக பார்த்தனர்.
எந்த விதத்தில் அரசியல் காழ்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சியினர் கூறுகின்றனர் என தெரியவில்லை. தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் அதற்குரிய ஆதாரங்கள் இருக்கும் என்பதால்தான் சோதனை நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் சட்டத்தை மதிக்கிறார் என்றால், அமலாக்கத்துறைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு அமலாக்கத்துறைக்கே வித்தியாசமான ஒரு வழக்கு. ஒரு குற்றாவாளியாக இருக்கும் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் நேரில் சென்று மருத்துவனையில் பார்த்துள்ளார், அமைச்சர்களும் பார்த்தள்ளனர். இது தமிழக மக்களையே தலைகுனிய வைக்கிறது.