சென்னை:தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அத்துறை மானியக் கோரிக்கையின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 56 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
1. நகர்ப்புறங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வார்டு மாமன்ற உறுப்பினர்கள் தற்போது நிர்வாகம் செய்யத் தொடங்கிவிட்டன. அதேபோல நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பினை விரிவுபடுத்தும் விதமாக நகர்ப்புறங்களில் பொதுக்குழு மற்றும் பகுதி சபை(Area sabha) உருவாக்கப்படும்.
2. பெரம்பலூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
3. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தனித்தனி சட்டங்களால் தற்போது நிர்வகிக்கப்படுகிறது. அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொது சட்டம் கொண்டு வரப்படும்.
4. மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 1,856.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும்.
5. திருப்பூர், வேலூர், திண்டுக்கல், நாகர்கோவில், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் ஆவடி ஆகிய மாநகராட்சிகளிலும், காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், தேனி, அல்லிநகரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருவேற்காடு, மாங்காடு மற்றும் பூந்தமல்லி ஆகிய நகராட்சிகளில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.