சென்னை:தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், விருப்பப்பாடமாக தமிழைத் தாய் மொழியாக கொள்ளாத மாணவர்கள் அவரவரின் தாய்மொழியைப் படித்து தேர்வு எழுதலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நீண்ட காலமாக அமலிலுள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழி கொள்கையைப் புகட்டும் நடவடிக்கைகள் சத்தம் இன்றி தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தன்னுடைய மொழிக்கொள்கையைப் பல்வேறு காலகட்டங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது. தாய் மாெழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இரு மாெழிக்கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகிறது. 2006ஆம் ஆண்டின் தமிழ்நாடு தமிழ்மாெழி கற்கும் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயப்பாடமாக கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.