தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் நிலையங்களில் சிசிடிவி காட்சிகளை பதிவு செய்ய கட்டுப்பாட்டு அறை வேண்டும்: அன்புமணி ராமதாஸ் - கண்காணிப்பு காமிரா பதிவுகள் ஒரே நாளில் அழிந்து விடும் வகையில் ஏற்பாடு

சென்னை: மாநிலத்தின் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பதிவு செய்வதற்காக சென்னையில் தனி கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

tamilnadu all police station cctv footage should be documented said anbumani ramadoss
tamilnadu all police station cctv footage should be documented said anbumani ramadoss

By

Published : Jul 2, 2020, 3:36 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோரின் சித்ரவதைக் கொலைகள் நாடு முழுவதும் உள்ளவர்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. அவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காவலர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்கள் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும், அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி காமிரா காட்சிகள் முழுமையாக பதிவாகியிருந்தால், அதைக் கொண்டே தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும். தேவையற்ற சர்ச்சைகள் எதுவும் ஏற்பட்டு இருந்திருக்காது. ஆனால், அக்காவல் நிலைய கண்காணிப்பு காமிராவில் பதிவாகும் அனைத்துக் காட்சிகளும் அடுத்த நாளே அழிந்து விடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

‘‘காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் பொது ஆவணங்கள். அவை அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். ஏதேனும் சாட்சிக்காக பொதுமக்கள் தரப்பிலிருந்து கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் கோரப்பட்டால், அவற்றை காவல் நிலைய நிர்வாகம் வழங்க வேண்டும்’’ என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

ஆனால், அத்தீர்ப்புக்கு மாறாக காவல்நிலைய கண்காணிப்பு காமிரா பதிவுகள் ஒரே நாளில் அழிந்து விடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அந்தக் காவல் நிலையத்தில் தொடர்ந்து தவறுகள் நடப்பதாகவும், அதை மறைக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் எண்ணத் தோன்றுகிறது.

காவல் நிலையங்களில் காமிராக்களை நிறுவும் பொறுப்பும், அவற்றை இயக்கும் பொறுப்பும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சைபர்கிரைம் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த காவலர்களைக் கொண்டு அமைக்கப்படும் தனிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

கண்காணிப்பு காமிராக்களின் காட்சிகள் சென்னையில் புதிதாக அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு காமிராவிலும் பதிவாகும் காட்சிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆவணப்படுத்தப்பட்டு சேமித்து வைக்கப்பட வேண்டும். அவ்வாறு ஆவணப்படுத்தப்பட்ட காட்சிகள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.

சென்னை மாநகர சாலைகளில் மட்டும் சுமார் 4 லட்சம் காமிராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றில் பதிவாகும் காட்சிகள் சேகரிக்கப்படும் போது, தமிழகக் காவல்நிலையங்களில் அதிகபட்சமாக உள்ள 5 ஆயிரம் காமிராக்களின் பதிவுகளை சேகரித்து வைப்பது கடினமானது அல்ல.

மாநிலத்தின் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகும் காட்சிகளை பதிவு செய்வதற்காக சென்னையில் தனி கட்டுப்பாட்டு அறையை தமிழக அரசு அமைக்க வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டு காவல்நிலையங்கள் குற்றம் நடக்காத பகுதிகளாக, மனித உரிமைகள் மதிக்கப்படும் இடமாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details