தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று, ஜனவரி 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. 513 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 5087 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கும் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் அதிமுக 1781 (ஒன்றிய கவுன்சிலர்) இடங்களிலும், 214 (மாவட்ட கவுன்சிலர்) இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட கவுன்சிலர் இடங்களை பொறுத்தமட்டில் அதிமுக 41.55 விழுக்காடு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 47.18 விழுக்காட்டில் வென்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் 34.99 விழுக்காடு அதிமுகவும், 41.26 விழுக்காடு திமுகவும் வென்றுள்ளது.
மாநில தேர்தல் ஆணையத்தால் 1996 முதல் தொடர்ந்து, 2001, 2006, 2011ஆம் ஆண்டுகளில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டன. வழக்கமாக, உள்ளாட்சி தேர்தலில், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சியே அதிக அளவில் வெற்றி பெறும். அந்த வகையில், அதிமுக - திமுக மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. கடந்த, 2011ஆம் ஆண்டு தனித்து போட்டியிட்டு, 70 விழுக்காட்டிற்கு அதிகமான பதவிகளை அதிமுக கைப்பற்றியது.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், ஆட்சியில் உள்ள கட்சியே உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் என்ற பழைய பல்லவியை தூர வீசி ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது திமுக. அதிமுகவிற்கு பெரிதளவில் பெரிதும் கை கொடுக்கும் என நம்பப்பட்ட வட மாவட்டங்களில் திணறிய அதிமுக, டெல்டாவில் முட்டி மோதி முயன்றும் கால் பங்கு அளவுக்கு கூட வெற்றி பெற முடியவில்லை. முதல்வரின் சொந்த தொகுதியான சேலத்திலும் திமுக குறிப்பிடும்படியான இடத்தை பெற்றுள்ளது.