சென்னை:தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்தத் தேர்விற்கு 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
அதேபோல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் பதிவு செய்தனர். தேர்விற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களில் 3 முதல் 4 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
இந்நிலையில் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளது. 10 ,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி நாளை (ஜூன் 20) அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார். அப்போது மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட விவரங்களை அறிவிக்கிறார்.
இணையதளத்தில் தேர்வு முடிவுகள்:அதனைத்தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கும் தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வுத்துறை மூலம் வெளியிடப்படுகிறது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய
இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centre), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், பள்ளி மாணவர்கள் பள்ளியில் அளித்துள்ள செல்போன் எண்ணிற்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஸ்கூலுக்கு செல்போன் கொண்டுவரக்கூடாது, மீறி கொண்டுவந்தால் பறிமுதல் தான்' - அதிரடி காட்டிய அன்பில் மகேஷ்