உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளின் விவரங்கள் ஆங்கில மொழியில் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். தற்போது, ஆங்கிலத்துடன் இந்தி, அஸ்ஸாமி, தெலுங்கு, கன்னடம், ஒடிஸா ஆகிய ஐந்து மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து தீர்ப்புகள் பதிவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான மின்னணு மென்பொருளை உச்ச நீதிமன்ற மின்னணு பிரிவு உருவாக்கியுள்ளது. இந்த மின்னணு பிரிவுக்கு தலைமை நீதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார்.
'மொழிப் பட்டியலில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும்..!' - தமிழிசை
சென்னை: "உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலை வெளியிடும் மாநில மொழி பட்டியல் விவகாரத்தில் தமிழ் மொழியை சேர்க்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்" என்று, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த பட்டியலில் தமிழ் மொழி இடம்பெறாததால், தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் சில பிராந்திய மொழிகளில் தீர்ப்பை பதிவேற்றம் செய்யும் முறையை நடைமுறைப்படுத்தியிருக்கும் சூழ்நிலையில், தமிழ் மொழியிலும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
நிர்வாக ரீதியாக மொழிபெயர்ப்பிலும்,மொழி ஆளுமையிலும் திறமையாளர்கள் தேவையென்றால் அதில் தனிக்கவனம் செலுத்தி தேர்ச்சி விற்பன்னர்களை அணுகி நடைமுறைப்படுத்தலாம். தமிழ்நாடு அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி உதவிட முன் வரவேண்டும். உச்ச நீதிமன்றமும் இதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.