சென்னை:அம்பேத்கரின் 66ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "அரசியலமைப்பின் தந்தை, சட்ட மேதை, அவரது நினைவு நாளை போற்றுவதில், மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். நேற்று புதுவையில் அம்பேத்கர் அவர்களும் மோடி அவர்களும் என்றும் புத்தகம் வெளியிடப்பட்டது. அதற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அம்பேத்கர் என்னவெல்லாம் கனவு கண்டாரோ அது இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் ஆற்றிய சட்டப் புத்தகம் தான் எனது புனித நூல் என்று பிரதமர் அறிவித்தார்.
ஜி20 மாநாட்டிற்கு நாம் தலைமை தாங்குகிறோம். நம் நாடு எப்படி இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் கனவு கண்டாரோ அந்த வழியில் நமது நாடு பயணித்துக்கொண்டிருக்கிறது. அந்த பலன் தான் ஜி20 மாநாட்டிற்கு நாம் தலைமை தாங்குகிறோம். அந்த வகையில் நாம் அவருக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறோம். ஜி20 மாநாடு குறித்து வரும் ஒன்பதாம் தேதி பிரதமர் மோடி, ஆளுநர், துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர்களுடன் ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்தவுள்ளார்.