சென்னை: தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "நான் தாழ்மையான ஒரு ஆலோசனை கூறினால் அதைக் கேட்காமல் தெலுங்கானாவை போய் பாரு என கூறுவதும், புதுச்சேரியை குண்டு சட்டி என கூறுவதும், ஒரு துணை நிலை மாநிலம் அதற்கு ஒரு அமைச்சரவை முதலமைச்சர் திட்டம் இருக்கிறது.
பெரிய மாநிலமாக இருக்கிறோம் என கூறிக்கொண்டு புதுச்சேரியை குண்டு சட்டி என கூறியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தெலங்கானாவில் என்ன நடக்கணுமோ அது சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதை நேரில் சென்று பார்க்க சொல்லுங்கள். என்னுடைய சொந்த மாநிலத்தில் இது போல் இருப்பதால் நீங்கள் உட்கார்ந்து பேசுங்கள் எனக் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.
சில பேர் இது என்ன குடும்பமா உட்கார்ந்து பேசுவதற்கு என கூறுகிறார்கள். தமிழ்நாடு குடும்பம் தானே, அதை பேசி தானே ஆகவேண்டும். வழக்குகள் விவாதங்கள் என டெல்லி வரை செல்வதை விட உட்கார்ந்து பேசுவது நல்லது என இன்றும் வரை கூறுகிறேன், மக்கள் மீது அக்கறை இருந்தால் பேசட்டும்.
தெலங்கானாவில் உள்ள பிரச்சனைகளை நான் பேசுவதற்கு தயார் முதலமைச்சர் வந்தால் என ஏற்கனவே கூறியிருக்கிறேன் அங்குள்ள மக்கள் எனை பாராட்டுகிறார்கள். அவர்களின் பிரச்சனையை கையில் எடுத்து நான் தீர்த்து உள்ளேன் போக்குவரத்து பிரச்சனை, 42 ஆயிரம் தொழிலாளர்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்சனை வரும்போதும் தீர்த்து வைத்தேன். எதிர் சங்க உறுப்பினர்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்கள் என்பதையும் கேட்டு அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி அதை நிறைவேற்ற வைத்தேன்.
அதனால் தெலங்கானாவை நீங்கள் பார்க்க வேண்டாம். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது இப்படியே சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் நாங்கள் வருகிறோம், கவர்னர் உட்கார்ந்து பேசுவோம். என்ன பிரச்சனை என்ன சந்தேகம் அதை நாங்கள் கேட்கிறோம் நீங்கள் எங்களுக்கு நேரம் கொடுங்கள் என்பதில் எந்த தவறும் இல்லை.