தமிழ்நாடு பாஜக தலைவராக கடந்த 2013ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டவர் தமிழிசை சௌந்தரராஜன். தந்தை குமரி அனந்தன், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரில் ஒருவராக பதவி வகித்தவர். குடும்பம் காங்கிரஸ் கட்சியின் பக்கம் நிற்க, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் தமிழிசை.
மருத்துவரான தமிழிசை அவரது மருத்துவ படிப்பை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் தொடங்கினார். மருத்துவம் தொடர்பான உயர் படிப்பை கனடாவில் முடித்தார். அரசியல் மீது அதீத ஆர்வம் கொண்ட தமிழிசை, 1999ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தந்தை காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், அவருக்கு விருப்பமான கட்சியைத் தேர்ந்தெடுத்தார். முதன்முதலில் 1999ஆம் ஆண்டு தென் சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின், 2001ஆம் ஆண்டு மருத்துவ அணி பொதுச்செயலாளராக பதவி வகித்தார். 2005ஆம் ஆண்டு பாஜக மாநிலப் பொதுச் செயலாளர், 2010ஆம் ஆண்டு பாஜகவின் மாநில துணைத் தலைவராக பதவி வகித்து அடுத்தடுத்த நிலையை அடைந்தார். அதனைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்றார்.
மருத்துவம் படித்து அரசியல் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தவர், இதுவரை அவர் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை. 2006, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் 2009, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் ஆகிய நான்கு தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இவர் போட்டியிட்ட நான்கு தேர்தல்களிலும் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோற்றுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் தூத்துக்குடியில், திமுக கட்சி வேட்பாளர் கனிமொழிக்கு எதிராக போட்டியிட்டார். வெற்றி பெற்றுவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர், தோல்வியைச் சந்தித்தார். எனினும் விடாமுயற்சியுடன் அரசியலில் பயணித்து வருகிறார்.